இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் (CRIB), அறிமுகம்

இந்த கட்டுரை தூய்மையான CRIB இலங்கை என்றும் சிறப்புத் தொடர் கட்டுரையின் ஓர் பகுதியாகும்.

தூய்மையான CRIB இலங்கை என்பது CRIB இன் முக்கியத்தும், அதன் பங்களிப்பு மற்றும் இலங்கையரிடையே கொடுகடன் மீள்செலுத்தும் சிறப்பான வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் ஊக்கிவிக்கும் முகமாக Moneta.lk இனால் ஆரம்பிக்கப்பட்ட சமூக நலம் சார்ந்த சிறப்பு இணைய செயல் திட்டம்

கடந்த வாரம், எனது நெருங்கிய நண்பன் ஒருவனை சந்தை தொகுதி ஒன்றில் சந்தித்தேன். அவர் LED தொலைக்காட்சி ஒன்றை வாங்குவதற்கு விற்பனையாளருடன் பேசிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டவுடன், கடந்த முறை அவரைச் சந்தித்த போது வங்கிக்கடன் பெறுவதைப் பற்றி பேசியது நினைவுக்கு வந்தது. தோளில் தட்டிக் கொண்டே கேட்டேன்,” வங்கிக்கடன் சரி வந்துவிட்டது போலிருக்கிறது. தொலைக்காட்சிப்பெட்டி வாங்குகிறீர்களோ?”.. சற்றுத் தடுமாற்றத்துடன் அவர் பதிலளித்தார், “இன்னும் இல்லை. பல வங்கிகளுக்கு விண்ணப்பித்து விட்டேன், ஆனால் எதுவும் சரிவரவில்லை, என்ன காரணம் என்றும் விளங்கவில்லை. எனது வீடு கட்டும் பணிகளையும் பிற்போட்டு வருகிறேன்.” நான் மீண்டும் கேட்டேன், “அப்படி என்றால் தொலைக்காட்சிப்பெட்டி வாங்கும் பணத்தை அதன் ஒரு பங்காக சேமித்திருக்கலாமே?” நண்பன் பதிலளித்தார், “இல்லை, வழக்கம் போல் இதனை என் கடனட்டை மூலம் வாங்கத் திட்டமிட்டுள்ளேன். எனக்கு இன்னும் பல தவணை நிலுவைகளும் உள்ளன. அவற்றையும் செலுத்த வங்கிக்கடன் கிடைக்கும் வரை காத்திருக்கிறேன்.”

பல முயற்சிகளின் பின்னும் எனது நண்பனுக்கு வங்கிகள் கடன் தர மறுப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்? நான் இவ்வாறு விளக்கினேன்: “பாதகமான கடன்தகுதி காரணமாகவே உங்களின் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. கடனட்டைகள் பலவற்றில் நிலுவைகள் இருக்கும் போது எந்த ஒரு வங்கியும் உங்களுக்கு கடன் வழங்க முன்வராது. எனது நண்பன் ஆச்சரியத்தோடு கேட்டார், “இன்னொரு வங்கியின் கடனட்டையிலுள்ள நிலுவையைப் பற்றி நான் கடன் விண்ணப்பிக்கும் வங்கி எப்படி அறியும்?”
இவ்வாறே நம்மில் பலர் நினைக்கின்றோம். ஒரு வங்கியில் பெறப்படும் கடன் அல்லது கடனட்டை தொடர்பான தகவல்களை ஏனைய வங்கிகள் அறிவதில்லை என நினைப்பது தவறானது. இலங்கையின் கடன்பெறுதல் துறையின் கண்காணிப்பாளராக CRIB செயற்படுகின்றது. எந்தவொரு கடன்வழங்கும் நிறுவனமும் கடன் விண்ணப்பங்களை அங்கீகரிப்பதற்கு முன்பாக கடன்பெறுபவர்களின் கடன்தகுதியை CRIB நிறுவனத்துடன் செவ்வைபார்த்துக் கொள்கின்றது. இவ்விளக்கக் கட்டுரை, CRIB என்றால் என்ன, அதன் நோக்கங்கள், CRIBஇன் உறுப்பினர்கள் மற்றும் அதன் தொழிற்பாடுகள் பற்றி விளக்குகின்றது.

CRIB என்றால் என்ன?

இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் (CRIB) 1980களில் நாட்டில் ஏற்பட்ட கடன் நெருக்கடியைத் தொடர்ந்து கடன்பெறுதல் துறையின் ஒழுக்காற்றை பேணுவதற்காக உருவாக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கை கொடுகடன் தகவல் பணியகச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளின் கூட்டாண்மை ஒன்றாக இது தொழிற்படுகின்றது. அதிகூடிய பங்குதாரராக இலங்கை மத்திய வங்கியும் ஏனைய பங்குகளை அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்கள் பலவும் கொண்டு செயற்படுகின்றது.

உரிமம் வழங்கப்பட்ட அனைத்து வர்த்தக வங்கிகள், சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், நிதி நிறுவனங்கள், குத்தகை நிறுவனங்கள் மற்றும் மத்திய வங்கியினால் கடன் வழங்கும் நிறுவனங்களாக அங்கீகரிக்கப்பட்ட மேலும் சில நிறுவனங்கள் உள்ளடங்களாக தற்போது 94 பங்குதாரர்கள் உள்ளனர். ஒரு நாட்டினது கடன்பெறுதல் துறையின் ஒழுக்காற்றைப் பேணும் நோக்கில் தெற்காசியாவில் உருவாக்கப்பட்ட முதல் தகவல் பணியகம் இலங்கையினுடைய CRIB என்பது பெருமைப்படத்தக்க விடயமாகும்.

CRIB நிறுவனத்தின் நோக்கங்கள் எவை?

கடன்பெறுதல் சம்பந்தப்பட்ட முறையற்ற செயற்பாடுகள் நிதியியல் துறையின் சிறந்த செயற்பாட்டிற்கு பாதகமாக அமைகின்றது. CRIB இலங்கையின் கடன்பெறுதல் மற்றும் கடன்வழங்கல் துறைகளில் முக்கிய பங்காற்றுகின்றது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விதத்தில் உதவக்கூடிய கடன்பெறுநர் தொடர்பான தரவுத்தளம் ஒன்றை உருவாக்குதல் எனும் நீண்டகால நோக்குடன் CRIB செயற்படுகின்றது.
கடன்பெறுதல் துறையின் ஒழுக்காற்றைப் பேணும் நோக்கில் CRIB தனது உறுப்பு நிறுவனங்களிடம் ஒருவர் பெற்ற கடன் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் அவரது பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் சேகரிக்கின்றது. நீங்கள் கடன் ஒன்றிற்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தடவையும் அந் நிதி நிறுவனத்தின் கோரிக்கையின் படி இத்தகவல்கள் பரிமாறப்படுகின்றது.

CRIB நிறுவனத்தின் உறுப்பினர்கள் யார்?

உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் (25), சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் (7), பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் (45), குத்தகை நிறுவனங்கள் (6), மெர்க்கன்டைல் மெர்ச்சண்ட் பேங்க் லிமிடெட், தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் மற்றும் இலங்கை ஏற்றுமதி கொடுகடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியன CRIBஇன் தற்போதைய உறுப்பினர்களாவர். இலங்கையில் நாணயநிலை மதிப்பீட்டு முறைமை (credit rating system) ஒன்றை உருவாக்கும் நோக்கில், CRIB உறுப்பினர்களின் கடன்பெறுநர் தொடர்பான வர்த்தக, கொடுகடன் மற்றும் நிதியியல் தகவல்களைச் சேகரித்து வழங்குகின்றது.

CRIB நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் பணிகள் யாவை?

நாட்டில் கடன்பெறுதல் துறையின் சிறந்த போக்கைப் பேணுவதற்கு, கொடுகடன் மற்றும் நிதியியல் தகவல்களைச் சேகரித்து வழங்குதலை விட, CRIB மேலும் சில பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அவற்றுள் சில பின்வருமாறு:

  • உறுப்பினர்களுக்கு பல சிறப்பான சேவைகளை வழங்குவதற்காக நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துதல்.
  • உள்நாட்டு அல்லது வெளிநாட்டு முகவர்களின் தேவை கருதி அல்லது எந்த ஒரு நபரினதும் கோரிக்கையின் நிமித்தம் நாணயநிலையை மதிப்பீடு செய்தல்.
  • பங்குதார கடன்வழங்கும் நிறுவனங்களுக்காக ஆய்வு மற்றும் பயிற்சித் திட்டங்களை முன்னெடுத்தல்.
  • அனைத்துத் துறைகளுக்கும், குறிப்பாக முறைசாரா துறைகளுக்கு, கடன் வசதிகளை வழங்கும் நோக்கில் அசையும் சொத்துக்கள் மீதான கொடுகடன்களை பதிவுசெய்தலும் கோவைப்படுத்தலும்.

CRIB தரவுத்தளம் மிகப் பரந்தளவிலான தகவல்களை உள்ளடக்கியுள்ளது!

CRIB உருவாக்கப்பட முன்னர் கடன் விண்ணப்பம் ஒன்று கிடைக்கப் பெரும் போது, விண்ணப்பதாரியின் நிதி நாணயநிலையை அறிய அந்நிறுவனம் ஏனைய நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும். இது மிகச் சிக்கலான வழிமுறை என்பதோடு அதிக காலமும் வீண் விரயப் படுத்தப்பட்டது. CRIB பேணிவரும் தரவுத்தளம் காரணமாக இச் செயன்முறை மிக எளிதாக்கப்பட்டுள்ளது. நம்பகரமான தகவல்கள் நிறைந்த CRIB தரவுத்தளத்தை நிறுவனங்கள் அதிகம் உபயோகிக்கின்றன. அனைத்து CRIB உறுப்பினர்களும் தங்களது கடன்பெறுநர் தகவல்களை தலைமைக் காரியாலயங்கள் ஊடாக ஒவ்வொரு மாத இறுதியிலும் தரவுத்தளத்திற்கு வழங்குகின்றன. இத் தரவுத்தளம் அதி நவீன தொழில்நுட்ப கட்டமைப்புக்களைக் கொண்டிருப்பதுடன், இதில் சேகரிக்கப்பட்டிருக்கும் தகவல்களின் உண்மைத் தன்மையும் இரகசியத் தன்மையும் மிகச் சிறப்பாகப் பேணப்படுகின்றன.

தேவை ஏற்படின், CRIBஇல் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களை அதன் உறுப்பு நிறுவனங்கள் விண்ணப்பிப்பதன் மூலம், கடன்பெறுநர் ஒருவரின் தேசிய அடையாள அட்டை அல்லது வணிகப் பதிவு இலக்கத்தை உபயோகித்துப் பெற முடியும். இதன் மூலம் நாம் அறிவதாவது, உங்களது கடன் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக CRIB தரவுத்தளத்தில் பேணப்படுவதோடு, தேவையான சந்தர்ப்பங்களில் அதன் உறுப்பு நிதி நிறுவனங்களுடன் பகிரப்படுகின்றது.

CRIB உடன் தொடர்பு கொள்ள வேண்டுமாயின்:


இலங்கை கொடுகடன் தகவல் பணியகம்
இல. 25, சார் பேரன் ஜயதிலக்க மாவத்தை,
கொழும்பு 01
தொலைபேசி: +94 112 131 313
தொலை நகல்: +94 112 338 259
மின்னஞ்சல்: info@crib.lk
இணையம்: www.crib.lk

எதிர்பார்த்திருங்கள்!

கடன்பெறுநர் ஒருவரினால் பெறப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் CRIB தரவுத்தளம் சேகரித்து வைத்திருப்பதோடு விண்ணப்பத்தின் பேரில் அத்தகவல்களை அந்நபருடனும், உறுப்பு நிதி நிறுவனங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றது. கொடுகடன் தகவல் என்றால் என்ன? மற்றும் கொடுகடன் தகவல்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது? என்பது தொடர்பிலான எமது அடுத்த விளக்கக்கட்டுரையை எதிர்பார்த்திருங்கள்.

HSBC Platinum Cash back Card
Nazny Shamath

Nazny is a contributing writer at Moneta.lk. She is an Accountant by Profession and a Central Banker. Influenced by her Passion for Writing, she is also an active Researcher and a Freelance Writer. She aspires to make an impact in the society by her write-ups and that is where Moneta.lk comes in.

Leave your comment