கொடுகடன் தகவல் என்றால் என்ன? உங்களது கடன் பற்றிய தகவல்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது?

இந்த கட்டுரை தூய்மையான CRIB இலங்கை என்றும் சிறப்புத் தொடர் கட்டுரையின் ஓர் பகுதியாகும்.

தூய்மையான CRIB இலங்கை என்பது CRIB இன் முக்கியத்தும், அதன் பங்களிப்பு மற்றும் இலங்கையரிடையே கொடுகடன் மீள்செலுத்தும் சிறப்பான வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் ஊக்கிவிக்கும் முகமாக Moneta.lk இனால் ஆரம்பிக்கப்பட்ட சமூக நலம் சார்ந்த சிறப்பு இணைய செயல் திட்டம்

கடந்த கட்டுரையில், CRIB என்றால் என்ன என்பதைப் பற்றியும் அதன் நோக்கங்கள் மற்றும் தொழிற்பாடுகள் பற்றியும் விளக்கியிருந்தோம். இலங்கை மத்திய வங்கியினதும் நிதி அமைச்சினதும் தலையீட்டில் 1990 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க இலங்கை கொடுகடன் தகவல் பணியகச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட CRIB, நாட்டின் கடன்பெறுதல் துறையின் ஒழுக்காற்றைப் பேணும் நோக்கில் செயற்படுகின்றது. கடந்த வெளியீட்டை வாசிக்கத் தவறியிருப்பின், ‘இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் – அறிமுகம்‘ எனும் விளக்கக்கட்டுரையை வாசிக்க.

பல சந்தர்ப்பங்களில், திடீரென ஏற்படும் நிதித் தேவைகளைச் சமாளித்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. எமது சேமிப்பு அந் நிதித் தேவைகளைச் சமாளிப்பதற்குப் போதுமானதாக இல்லாதபட்சத்தில், கடன் வழங்கும் நிதிநிறுவனங்களின் உதவியை நாட வேண்டியேற்படுகின்றது. உங்கள் நண்பனின் பக்கத்து வீட்டுக்காரர் ஏதோவொரு தேவைக்காக உங்களிடம் கடன் தொகையொன்றை கடனாகக் கேட்கிறார் என வைத்துக் கொள்வோம். தவணை அடிப்படையில் சில வருடங்களுக்குள் செலுத்தி முடிப்பதாகக் கூறுகிறார். உங்களது நண்பனிடம் இந் நபரைப் பற்றி முழுமையாக விசாரிக்காமல் இக் கடன் தொகையைக் கொடுத்துதவுவீர்களா? நிச்சயமாக இல்லை. நீங்கள் இச்சந்தர்ப்பத்தில் அந் நபரின் கடனைத் திருப்பித் தரக் கூடிய இயலுமையை ஆராய்கின்றீர்கள். இதே போல்தான், நீங்கள் நிதிநிறுவனங்களிடம் கடன் விண்ணப்பிக்கும் போது உங்களைப் பற்றி முன்கூட்டியே ஆராய்கின்றன. நீங்கள் ஏற்கனவே கடன் பெற்றுள்ள நிறுவனங்களிடமிருந்து உங்கள் நிதி நாணயத்தன்மையை அறிந்து கொள்கின்றன.

கொடுகடன் தகவல்களை வழங்குவதில் CRIB நிறுவனத்தின் பங்கு

உறுப்பு நிதிநிறுவனங்களின் கடன்பெறுநர் தொடர்பான வர்த்தக, கொடுகடன் மற்றும் நிதியியல் தகவல்களைச் சேகரித்து மத்திய தரவுத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ள CRIB, உறுப்பினர்களுக்கு இத்தகவல்களை தேவையான போது வழங்குகின்றது. மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், நிதி நிறுவனங்கள், குத்தகை நிறுவனங்கள் மற்றும் மேலும் சில கடன்கொடுநர்கள் இதன் உறுப்பினர்கள் என்பதோடு, இந்நிறுவனங்கள் தங்களது கடன்பெறுநர் தகவல்களை CRIB தரவுத்தளத்திற்க்கு ஒவ்வொரு மாத இறுதியிலும் வழங்குகின்றது. தேசிய அடையாள அட்டை எண்ணை அல்லது வணிக்கப்பதிவு இல்லக்கத்தை உபயோகித்து, இத்தரவுத்தளத்தில் பேணப்படும் தகவல்களை CRIB உறுப்பு நிறுவனங்கள் கோரிப் பெற்றுக் கொள்ளலாம்.

உங்களது பெயர் மற்றும் விபரங்கள் CRIB தரவுத்தளத்தில் உள்ளதா?

மீள் செலுத்தாத கடன் பெறுநர்களின் தகவல்களை மட்டுமே CRIB தரவுத்தளம் உள்ளடக்கியுள்ளது என நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இது தவறான ஒரு எண்ணமாகும். உங்களது பெயர் மற்றும் விபரங்கள் CRIB தரவுத்தளத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தால் இதைப் பற்றி கலவரமடைய வேண்டாம்.

நீங்கள் கடன்வசதி ஒன்றைத் தனியாகவோ/ இன்னொருவருடன் சேர்ந்தோ பெற்றிருந்தால், வியாபாரம் ஒன்றின் தனி/ கூட்டு உரிமையாளராகவிருந்து உங்களின் வியாபாரப் பெயரில் கடன்வசதி பெறப்பட்டிருப்பின், இன்னொருவர் கடன்வசதியொன்றைப் பெறுவதற்கு நீங்கள் பிணையாளியாக ஒப்பமிட்டிருப்பின், நிறுவனமொன்றின் பணிப்பாளராகவிருந்து அந் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன்வசதியிற்கு நீங்கள் தனிப்பட்ட பிணையாளியாக ஒப்பமிட்டிருப்பின், வங்கியொன்றில் உங்களது கணக்கில் மேலதிகப்பற்று இருப்பின், அல்லது நீங்கள் வரைந்த காசோலைகள் பணம் செலுத்தப்படாமல் மீள்திருப்பப்பட்டிருப்பின், உங்களது விபரங்கள் CRIB தரவுத்தளத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
மீள் செலுத்திய கடன் தகவல்களையும், தற்போது நிலுவையிலுள்ள கடன் வசதிகளையும் உள்ளடக்கிய தகவற்கூற்றே கடன் அறிக்கை (CRIB அறிக்கை) எனப்படும். CRIB தரவுத்தளம் பின்வரும் தகவல்களை உள்ளடக்கியது:

  • நீங்கள் கடன் பெற்றுள்ள நிதி நிறுவனங்களின் விபரங்கள்
  • உங்களின் தனிப்பட்ட தகவல்கள்
  • கடன்தொகைகள்
  • கடன்வசதிகள் பெறப்பட்ட திகதிகள்
  • மீள்செலுத்தும் முறை
  • பிணையாக வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் விபரங்கள்
  • மாதாந்தத் தவணைக் கொடுப்பனவுகள்
  • அண்மையில் மீள்செலுத்தப்பட்ட கடன்வசதிகளின் விபரங்கள்
  • நிலுவைகள் (ஏதாவது இருப்பின்)
  • மீள்திருப்பப்பட்ட காசோலைகளின் விபரங்கள்

கடன் அறிக்கை மிக உபயோகமானது!

CRIB அறிக்கையை உபயோகிப்பதன் மூலம் நிதி நாணயத்தன்மையைக் கொண்ட வாடிக்கையாளர்களை அறிந்து கொள்வதற்கும், நிறுவனங்களின் செயற்படாக் கடன்களைக் குறைப்பதற்கும் நிதிநிறுவனங்களால் முடிகின்றது. கடன் விண்ணப்பம் ஒன்று கிடைக்கப்பெறும் போது, அவ் விண்ணப்பதாரியைப் பற்றி அறிந்து கொள்வதற்கு நிதிநிறுவனங்கள் CRIB அறிக்கையை நாடுகின்றன.
இதே போன்று, CRIB அறிக்கையின் மூலம் கடன்பெறுநர்களுக்கும் பல நன்மைகள் உண்டு. CRIB அறிக்கையின்படி உங்களது கடந்தகால கடன்வசதிகள் சரியான முறையில் மீள்செலுத்தப்பட்டிருப்பின், தகுந்த வேறொரு காரணமின்றி உங்களது கடன் விண்ணப்பத்தை நிதி நிறுவனங்கள் நிராகரிக்க முடியாது. மேலும், நீங்கள் விண்ணப்பிக்கும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

உங்களது கடன் பற்றிய தகவல்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது?

இலங்கை கொடுகடன் தகவல் பணியகச் சட்டத்தின் கிட்டிய மீள்திருத்தத்தின் பிட்பாடு, பொதுமக்கள் அவர்களது கடன் அறிக்கையை CRIB இடமிருந்து விண்ணப்பித்து பெற இயலும். இதன் மூலம் உங்களைப் பற்றிய iReport (i-அறிக்கை) ஒன்றைப் பெற்றுக் கொண்டு உங்களது நிதி நிலைமையை நன்கு அறிய முடிகின்றது. கடன்வசதிகளை மீள்செலுத்துவதில் அல்லது தவணைக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதில் நிலுவைகளை வைப்பவராக அல்லது கால தாமதத்தோடு செலுத்துபவராக நீங்கள் இருப்பின், கடன்வசதி ஒன்றுக்கு விண்ணப்பிக்க முன்னர் உங்களது வழக்கத்தை மாற்றிக்கொள்ள முடிகின்றது. இவ்வாறு செய்வதனால் நீங்கள் விண்ணப்பிக்கும் கடன் நிதிநிறுவனங்களால் நிராகரிக்கப் படுவதைத் தவிர்க்க முடியும். CRIB தரவுத்தளத்தில் பேணப்படும் உங்களது கடன் தொடர்பான தகவல்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின், நிதி நிறுவனங்கள் பிழையான அறிக்கையைப் பார்த்து நீங்கள் விண்ணப்பித்துள்ள கடன்வசதியை நிராகரிக்க முன் பிழைகளைத் திருத்தவும் இயலும். பிழையான தகவல்கள் தொடர்பாக நீங்கள் CRIB நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தினால், ‘Dispute Resolution’ எனும் படிமுறையின் கீழ், நிதி நிறுவனத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம் பிழையான தகவல்கள் திருத்தப்படும்.

உங்களது i-Report பிரதியை விண்ணப்பக்கடிதம் ஒன்றுடன் ரூபா. 250/- செலுத்தி இல.148 , Vauxhall வீதி, கொழும்பு 2 யிலுள்ள CRIB நிறுவனத்திற்கு வார நாட்களில் மு.ப.9 .00 மணி முதல் பி.ப.3 .00 க்கு இடைப்பட்ட நேரத்திற்குள் நேரடியாகச் சென்று அல்லது எந்தவொரு வங்கிக் கிளையிலும் உங்களது தேசிய அடையாள அட்டையைக் காண்பித்து இத்தொகையைச் செலுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு CRIB நிறுவனத்தின் உதவி இலக்கம் 0112131313 இனைத் தொடர்பு கொள்ள முடியும்.

உங்களது iReport கிடைக்கப்பெற்ற பின்னர் இவ் அறிக்கையை வாசித்துத் தகவல்களை விளங்கிக் கொள்வது எவ்வாறு? Moneta உடன் இணைந்திருங்கள். ‘கடன் அறிக்கை (i-Report) ஒன்றை வாசித்துக் குறிப்பறிதல்’ பற்றிய எமது அடுத்த விளக்கவுரையை எதிர்பார்த்திருங்கள்.

HSBC Platinum Cash back Card
Nazny Shamath

Nazny is a contributing writer at Moneta.lk. She is an Accountant by Profession and a Central Banker. Influenced by her Passion for Writing, she is also an active Researcher and a Freelance Writer. She aspires to make an impact in the society by her write-ups and that is where Moneta.lk comes in.

Leave your comment