கடன் அறிக்கை (i-Report) ஒன்றை வாசித்துக் குறிப்பறிதல்

இந்த கட்டுரை தூய்மையான CRIB இலங்கை என்றும் சிறப்புத் தொடர் கட்டுரையின் ஓர் பகுதியாகும்.

தூய்மையான CRIB இலங்கை என்பது CRIB இன் முக்கியத்தும், அதன் பங்களிப்பு மற்றும் இலங்கையரிடையே கொடுகடன் மீள்செலுத்தும் சிறப்பான வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் ஊக்கிவிக்கும் முகமாக Moneta.lk இனால் ஆரம்பிக்கப்பட்ட சமூக நலம் சார்ந்த சிறப்பு இணைய செயல் திட்டம்

இலங்கை கொடுகடன் தகவல் பணியகச் சட்டத்தின் அண்மைய திருத்தங்களின் பின்னர், தனிநபரொருவர் தனது கடன் அறிக்கை (i-Report) ஒன்றை CRIB இடம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் கடன்கொடுநர் ஒருவர் தனது கொடுகடன் நிலைமையை அறிந்து கொள்ள முன் தாமே அறிந்து ஆவண செய்து, விண்ணப்பித்த கடன் நிராகரிக்கப் படக் கூடிய சந்தர்ப்பங்களைக் குறைத்துக் கொள்ள முடியும். மேலதிகமாகத் தெரிந்து கொள்ள ‘கொடுகடன் என்றால் என்ன? உங்களது கடன் பற்றிய தகவல்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது?’ பற்றிய எமது கட்டுரையை வாசிக்குக.

நீங்கள் விண்ணப்பிக்கவுள்ள கடன் ஒரே தடவையில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமாகையில் நாங்கள் உங்களுக்கு வழங்கும் முக்கியமான அறிவுரை இது தான். உங்கள் கடனறிக்கையை முன்கூட்டியே பெற்றுக் கொண்டு தவறான மீள்கொடுப்பனவு முறைகளை மாற்றிக் கொள்ளுங்கள்; பிணையாளியாக ஒப்பமிடுவதன் மூலம் உண்டாகக்கூடிய மறைமுகக் கடன் பொறுப்புக்களை நீக்கிக் கொள்ளுங்கள்; மேலும் கடனறிக்கையில் காணப்படக்கூடிய பிழைகளைத் திருத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் CRIB இடம் விண்ணப்பித்துப் பெறும் i-Report உங்கள் கடன் தகவல்களை உள்ளடக்கிய விரிவான ஓர் அறிக்கையாகும். கடன் கொடுநர்களுக்கு வழங்கும் தகவல்களை விட உங்களுக்குத் தரப்படும் அறிக்கை அதிக தகவல்களைக் கொண்டிருக்கும். இவ்விளக்கக் கட்டுரை i-Report ஒன்றை வாசித்துக் குறிப்பறிதல் பற்றியதாகும். CRIB இணையத்தளத்தில் i-Report மாதிரி அறிக்கையைக் காண முடியும்.

i-Report ஒன்றில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் எவை?

அறிக்கைத் தலைப்பு

உங்களது பயனர் ID மற்றும் தனியான CRIB அறிக்கை இலக்கம் ஆகியன தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். நீங்கள் இவ் அறிக்கையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கம், அறிக்கை படிவுருவாக்கப்பட்ட திகதி என்பனவும் காணப்படும்.

தேடல் விபரங்கள்

இப்பகுதியில், கடனறிக்கை விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டவாறு உங்களின் பெயர், அடையாள இலக்கம் (தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டு), பால், தபால் முகவரி ஆகியன காணப்படும்.

தனிநபர் விபரங்கள்

உங்களின் பெயர், அடையாள இலக்கம் (தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, வாகன அனுமதிப்பத்திரம்), நாட்டுரிமை, பால், பிறந்த திகதி, விவாக நிலை, கணவன்/மனைவியின் பெயர், தொலைபேசி இலக்கங்கள் என்பன குறிப்பிடப்பட்டிருக்கும்.

தகவல் அளிக்கப்பட்ட பெயர்கள்

நீங்கள் உங்களது பெயரை பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதங்களில் உபயோகிக்கக்கூடும். உதாரணமாக, முழுப்பெயர், முதலெழுத்துக்களுடன் பெயர், அல்லது முழுப்பெயரின் மாறிய ஒழுங்கு, போன்றன. உங்கள் தகவல்கள் அனைத்தும் CRIB இனால் ஓர் அடையாள எண்ணின் கீழ் சேகரிக்கப்படும். இப்பகுதியில், நீங்கள் கடன் பெற்றிருக்கும் வெவ்வேறு நிதி நிறுவனங்களில் உங்கள் பெயர் பதிவிடப்பட்டிருக்கும் விதங்களையும், அவ்வாறு பதிவிடப்பட்ட திகதிகளையும் நிரட்படுத்துகின்றது.

விலாச விபரங்கள்

நீங்கள் கடன் பெற்றிக்கும் வெவ்வேறு நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடைசி மூன்று நிரந்தர மற்றும் தபால் முகவரிகளைக் கொண்டிருக்கும்.

தொழில் விபரங்கள்

வெவ்வேறு நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கிணங்க, நீங்கள் தொழில் செய்பவரா, தொழில் செய்யுமிடம், தொழில்சார் துறை, வியாபாரத்தின் பெயர் மற்றும் வியாபாரப் பதிவிலக்கம் ஆகியவற்றையும், இவ்விபரங்கள் பதிவு செய்யப்பட்ட திகதிகளையும் குறிப்பிடும்.

வணிகத்தொடர்பு விபரங்கள்

வியாபாரப் பெயர், வியாபாரப் பதிவிலக்கம், வியாபாரத்தின் வகை ஆகியன உள்ளடங்கலாக, உங்களின் தனியுடைமை மற்றும் பங்குடைமை வியாபாரங்களின் விபரங்களைக் காட்டும்.

தற்போதைய மற்றும் எதிர்கால கடன் பொறுப்புக்கள் – சுருக்கமாக (மீள்செலுத்தப்பட்டவை தவிர்ந்த)

உங்களின் தற்போதைய மற்றும் எதிர்கால கடன் பொறுப்புக்கள் அனைத்தையும் பற்றிய விபரங்கள் இப்பகுதியில் சுருக்கமாகக் காட்டப்பட்டிருக்கும். நீங்கள் பெற்ற கடன்கள் பற்றிய விபரங்களும், நீங்கள் பிணையாளியாக ஒப்பமிட்டுள்ள கடன்கள் பற்றிய விபரங்களும் இங்கு தொகுக்கப்பட்டிருக்கும். பெற்றுக் கொண்டுள்ள கடன் வசதிகளின் எண்ணிக்கை, கடன் தொகைகள், இன்னும் மீள்செலுத்த வேண்டியுள்ள கடன் தொகைகள் என்பன உங்களுடையனவும், நீங்கள் பிணையாளியாக ஒப்பமிட்ட கடன்களினதும் தகவல்கள் தனித்தனியாகத் தரப்பட்டிருக்கும். அனைத்து தனிப்பட்ட/நிறுவனக் கடன் வசதிகள் (personal/ corporate facilities), கூட்டுக் கடன் வசதிகள் (joint facilities), மற்றும் உத்தரவாதமளிக்கப்பட்ட கடன் வசதிகள் (guaranteed facilities) பற்றிய விபரங்கள் இங்கு அட்டவணைப் படுத்தப்பட்டிருக்கும். ஆனால், மீள்செலுத்தப்பட்ட (settled), மூடப்பட்ட (closed), மீளெடுக்கப்பட்டு செலுத்தப்பட்ட (repossessed & settled), நீதிமன்றத்தினூடாக செலுத்தப்பட்ட (settled through courts), அல்லது பகுதி செலுத்தித் தீர்க்கப்பட்ட (settled-part written off) கடன் வசதிகள் பற்றிய விபரங்களை உள்ளடக்காது.

பெறப்பட்ட கடன் வசதிகளின் தற்போதைய நிலைமை (மீள்செலுத்தப்பட்டவை தவிர்ந்த)

நீங்கள் ஏற்கனவே பெற்றுக் கொண்டுள்ள கடன்களின் தற்போதைய நிலைமை இப்பகுதியில் காட்டப்படும், உதாரணமாக, செயற்படும் கடன் வசதி, நிறுத்தப்பட்ட கடன் வசதி. மேலும், செலுத்தப்பட வேண்டிய தொகைகள் எவ்வளவு காலமாக நிலுவையிலுள்ளன (நாட்களின் எண்ணிக்கை – ஒரு மாதத்திற்கு மேலாக, 2 மாதங்களுக்கு மேலாக, அல்லது 3 மாதங்களுக்கு மேலாக) எனவும் காட்டப்படும்.

மீள்திருப்பப்பட்ட காசோலைகளின் விபரங்கள்

உங்களின் நடைமுறைக் கணக்குகளிலிருந்து வரையப்பட்ட காசோலைகள் மீள்திருப்பப்பட்ட சந்தர்ப்பங்களின் எண்ணிக்கையும், அவ்வாறு மீள்திருப்பப்பட்ட காசோலைகளின் மொத்தத் தொகையும் காட்டப்படுகின்றது. அறிக்கையின் கீழ்ப்பகுதியில் மற்றோரிடத்தில், மீள்திருப்பப்பட்ட காசோலைகளின் முழு விபரங்களும் (வங்கியின் பெயர், காசோலை இலக்கம், காசோலையின் தொகை, மீள்திருப்பப்பட்ட திகதி, காரணம் உள்ளடங்களாக) தரப்படும்.

மீள்செலுத்தப்பட்ட கடன் வசதிகளின் விபரங்கள் – சுருக்கமாக

இப்பகுதியில், உங்களின் மீள்செலுத்தப்பட்ட கடன்கள் மற்றும் நீங்கள் பிணையாளியாக ஒப்பமிட்டு பெற்றுக் கொண்டு மீள்செலுத்தப்பட்ட கடன்கள் பற்றிய விபரங்கள் காட்டப்பட்டிருக்கும், கடந்த 5 வருடங்களுக்குள் கடன் வசதிகள் மீள்செலுத்தப்பட்ட தடவைகள் மற்றும் அவற்றின் மொத்தத் தொகைகள் என்பன காட்டப்பட்டிருக்கும்.

மீள்செலுத்தப்பட்ட கடன் வசதிகளின் விபரங்கள் – விரிவாக

கடந்த 5 வருடங்களுக்குள் நீங்கள் மீள்செலுத்திய கடன் வசதிகள் பற்றிய விரிவான தகவல்கள் இங்கு தரப்படும். உங்களின் மீள்செலுத்தப்பட்ட கடன் வசதிகள் மற்றும் நீங்கள் பிணையாளியாக ஒப்பமிட்டு பெற்றுக் கொண்டு மீள்செலுத்தப்பட்ட  கடன் வசதிகள் பற்றிய விபரங்கள் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டு (உதாரணமாக, கடன் பொறுப்புக்கள், குத்தகைக்கடன் பொறுப்புக்கள், போன்றன), மீள்செலுத்திய தடவைகள், மற்றும் அவற்றின் தொகைகள் என்பன தனித்தனியாக அட்டவணைப் படுத்தப்பட்டிருக்கும்.

கடந்த 6 மாதங்களில் பெற்றுக் கொண்ட அறிக்கைகள்

உங்களின் கடனறிக்கையை நீங்கள் அல்லது ஏனைய நிதி நிறுவனமொன்று கடந்த 6 மாத காலப்பகுதியில் விண்ணப்பித்துப் பெற்றுக் கொண்ட தடவைகள் மற்றும் காரணங்கள் இங்கு தரப்படும்.

கடந்த 24 மாத காலப்பகுதியில் கடன் வசதிகளின் தவணைகளை மீள்செலுத்திய விதம்

நீங்கள் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் கடன் வசதிகளின் தவணைகளை மீள்செலுத்திய விதத்தை இப்பகுதி காட்டுகின்றது. நிலுவையிலுள்ள காலப்பகுதியிற்கேற்ப வெவ்வேறு நிறங்களால் கட்டங்கள் தீட்டப்பட்டு ஓர் அட்டவணை தரப்பட்டுள்ளது, உதாரணமாக, 90 நாட்களுக்கு மேல் தவணை செலுத்தப்படாமல் நிலுவையிலிருக்கும் கடன் வசதிகளின் நாட்கள் குறிப்பிடப்பட்டு சிவப்பு நிறத்தினால் கட்டம் தீட்டப்பட்டிருக்கும்.

விபரப்பட்டியல்

அறிக்கையில் பாவிக்கப்பட்டுள்ள அனைத்து சுருக்கங்களுக்குமான விரிவான விளக்கங்கள் இப்பகுதியில் காட்டப்படுகின்றது.

உங்களின் நிதி நாணயத்தன்மையை அறிந்து கொள்வதற்கு இந்த விரிவான i-Report பெரிதும் உதவுகின்றது. கடன்களை மீள்செலுத்துவதில் ஒழுங்கற்ற தன்மைகள் காரணமாக CRIB தரவுத்தளத்தில் உங்களின் பெயர் பழுதுபடுமாயின் எந்தவொரு நிதி நிறுவனத்திலிருந்தும் இலகுவாகக் கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியாது. ‘CRIB கரும்பட்டியல் (black-listing) என்றால் என்ன?’ என்பது பற்றி அறிய எமது அடுத்த விளக்கக் கட்டுரையை எதிர்பார்த்திருங்கள்.

HSBC Platinum Cash back Card
Nazny Shamath

Nazny is a contributing writer at Moneta.lk. She is an Accountant by Profession and a Central Banker. Influenced by her Passion for Writing, she is also an active Researcher and a Freelance Writer. She aspires to make an impact in the society by her write-ups and that is where Moneta.lk comes in.

Leave your comment